Home > Shiva Temples > Mt Kailash

Mt Kailash

தங்கம் போல் பளிச்சிடும் கயிலாய மலை : சிவபெருமானின் இருப்பிடம் கைலாயம். இதனை வடமொழியில் “கைலாஷ்’ என்பர். நாவுக்கரசர் கயிலைத்தாண்டகத்தில் “காவாய் கனகத்திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி போற்றி”( தங்கக்குவியல் போல் காட்சியளிக்கும் சிவனே வணக்கம், கயிலையில் வசிக்கும் இறைவனே வணக்கம்) என்று இம்மலையைப் போற்றி வணங்குகிறார். பனி சூழ்ந்த இம்மலை காலையில் சூரியோதய வேளையில் பொன்மலையாகக் காட்சி தரும். அக்காட்சியை அப்பர் “கனகத்திரள்’ என்று குறிப்பிடுகிறார். இம்மலையில் சிவபெருமான் இருக்கிறார் என்பதைவிட, இம்மலையையே சிவபெருமானாகக் கருதி பக்தர்கள் வழிபடுகின்றனர். இந்த மலையின் அருகில் மானசரோவர் என்னும் புனித ஏரி உள்ளது. இது பார்வதிதேவியின் அம்சமாகும். இந்துமதம் மட்டுமல்லாமல், புத்தம், சமணம், பொம்பா (திபெத் பழங்குடியினர் மதம்) மதங்களிலும் இது புனிதமலையாகப் போற்றப்படுகிறது. உலகத்தின் கூரையாகப் போற்றப்படும் நாடு திபெத். இங்கு தான் கயிலாயமலை அமைந்துள்ளது. கயிலைமலையின் உயரம் 22 ஆயிரம் அடி. சுற்றளவு 52கி.மீ. இதனைச் சுற்றிவருவதை “பரிக்ரமா’ என்று குறிப்பிடுவர். மலை அடிவாரத்தில் 50கி.மீ.,தூரம் கடந்தால் மானசரோவர் ஏரியை அடையலாம். அதன் சுற்றளவு 100 கி.மீ., கைலாஷ், மானசரோவர் ஏரி தரிசனமும், பரிக்ரமாவும் சேர்ந்ததே கைலாஸ் மானசரோவர் யாத்திரையாகும். சாப்பாடு, உணவு, உடை என்று பலவகையிலும் சிரமம் நிறைந்தது இந்த யாத்திரை. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் தான் யாத்திரை செல்லமுடியும். மற்ற மாதங்களில் கடும்குளிரால் அங்கு செல்ல இயலாது. ஜூன், ஜூலை மாதங்கள் மிகவும் சாதகமானது, இருப்பினும் மழையில் நனைவதை தவிர்க்க முடியாது.

மழை தரும் “வெற்றித்திருமகன்’ : கயிலாயமலைக்குச் செல்லும் வழியில் மாந்தாதா மலை உள்ளது. மாந்தாதா ராமபிரானின் முன்னோர்களில் ஒருவர். அவர் தவம் செய்த இடம் இம்மலை. இம்மலைக்கு இருசிறப்புகள் உண்டு. விநாயகர் மாந்தாதா மலையில் உள்ள குகையிலும், முருகன் சரவணப்பொய்கையிலும் அவதரித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இம்மலை 15கி.மீ., நீளமும், 25 ஆயிரத்து 355அடி உயரமும் கொண்டது. இம்மலைத்தொடரில் பெரியதும், சிறியதுமாக பலமலைகள் உள்ளன. இம்மலையை “மெமோ நாம் கியால்’ என்று அழைக்கின்றனர். “வெற்றித்திருமகன்’ என்பது இதன் பொருள். மழை தரும் கடவுளாக மாந்தாதா மலையை திபெத் மக்கள் வழிபடுகின்றனர்.

கயிலை பற்றி தமிழ்ப்பாடல்கள் : கயிலாயமலையை “கைலாசபதி’ என்பர். இதற்கு “கயிலைநாதன்’ என்று பொருள். கயிலாயமலையை அடிவாரம் முதல் உச்சிவரை மிக அருகில் இன்று தரிசிக்க வேண்டுமானால் “அஷ்டபத்’ என்ற இடத்துக்குச் செல்ல வேண்டும். இங்கிருந்து தரிசிப்பதை “தென்முக கயிலாய தரிசனம்’ என்பர். கயிலாயமலையின் சிறந்த புகைப்படங்கள் அனைத்தும் அஷ்டபத்தில் இருந்தே எடுக்கப்படுகின்றன. ஜைனமதத்தின் முதல் தீர்த்தங்கரரான ரிஷபதேவர் ஒரு மகாசிவராத்திரி நாளில் அஷ்டபத்தில் முக்தி பெற்றதாக கருதுவதால் ஜைனர்களுக்கு புனிதமான இடமாக விளங்குகிறது. அதாவது ஞானம் அருளும் தட்சிணாமூர்த்தி கோலமாகும். தமிழர்களுக்கு கயிலாயமலை மீது ஈடுபாடு அதிகம். வடமொழியில் கயிலைநாதனைத் துதிக்கும் ஸ்தோத்திரங்களை விட தமிழில் ஏராளமான பாடல்கள் உள்ளன. “கண் பெற்ற பயனே கயிலைநாதனைக் காண்பது தான்’ என்று நாயன்மார்கள் சிவபெருமானைப் போற்றியுள்ளனர். காரைக்காலம்மையார், இந்த மலை மீது நடந்து சென்றால் அது மரியாதைக் குறைவெனக் கருதி, தலையால் ஏறிச் சென்றதாக வரலாறு கூறுகிறது.

சர்வமத வழிபாடு : “பொம்பா’ என்பது திபெத் மக்களின் ஆதி மதம். எப்போதும் ஆன்மிகசக்தியை வெளியிட்டுக் கொண்டிருக்கும் மலையாக கயிலாயத்தை இம்மக்கள் கருதுகின்றனர். ஒன்பது முகம் கொண்ட சுவஸ்திக் மலையாக கயிலையைப் போற்றுகின்றனர். இந்துக்களைப் போல பொம்பா மதமக்களும் கூட்டம் கூட்டமாக மலையைச் சுற்றிவருவர். ஆனால், இந்துக்கள் கயிலாயமலையை வலமாகச் சுற்றுவர். இவர்களோ இடமாகச் சுற்றுகின்றனர். கற்கள் நிறைந்த மலைப்பாதை நடப்பதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால், இவர்கள் அங்கப்பிரதட்சணம் போல, சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்தபடியே 52கி.மீ., தூரத்தையும் கடந்து செல்வர்.புத்தமதம் கயிலாயமலையை “பிரபஞ்சத்தின் மையம்’ என்று குறிப்பிடுகிறது. மானசரோவர் ஏரியின் கரையில் பல பவுத்த மடங்கள் உள்ளன. திபெத்தில் புத்தமதத்தைப் பரப்பிய பத்மசம்பவர் கயிலாயமலையில் நீண்டகாலம் தவம் செய்தார். கயிலாயத்தை பவுத்தர்கள் “காங் ரிம் போசே’ என்றும் மானசரோவர் ஏரியை “ஸோ மாபம்’ என்று சொல்லி இருகரம் குவித்து வணங்குவர். ஜைன மதத்தின் முதல் தீர்த்தங்கரரான ரிஷபதேவர் முக்தி அடைந்த புனிதமலையாக கயிலாயம் கருதப்படுகிறது.

நீங்களே அபிஷேகம் செய்ய வேண்டுமா?இந்தியாவிலேயே புகழ்பெற்ற சிவத்தலம் கங்கை கரையில் இருக்கும் காசி. இங்கு 64 நீராடும் துறைகள் உள்ளன. இதில் மிக முக்கியமான தீர்த்தக்கட்டமாக மணிகர்ணிகா காட் உள்ளது. இங்கு தான் இறந்தவர்களின் உடல்கள் எரிந்து கொண்டே இருக்கும். அங்கு சிவபெருமானும், உமையவளும் உயிர்களிடம் தாரகமந்திரத்தை உபதேசித்து, முக்திக்கு கொண்டு செல்வதாக ஐதீகம். காசிக்குச் செல்பவர்கள் மணிகர்ணிகாவில் நீராடி, கங்காதீர்த்தத்தை எடுத்துச் சென்று தாங்களே கருவறையில் இருக்கும் விஸ்வநாதருக்கு கங்காபிஷேகம் செய்வது சிறப்பு. தினமும் இரவு 7.45மணியில் இருந்து 8.30 மணிவரை சப்தரிஷி பூஜை என்னும் சிறப்பு வழிபாடு இங்கு நடக்கிறது. ஒரே நேரத்தில் ஏழு பண்டாக்கள்(அர்ச்சகர்கள்) கூடி நின்று அர்ச்சனை செய்வர். அத்திரி, வசிஷ்டர், காஷ்யபர், கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்ரர், ஜமதக்னி ஆகிய ஏழுரிஷிகளும் விஸ்வநாதரை வழிபடுவதாக ஐதீகமாகும்.

பச்சைநிற பனிக்குளம் : உலகிலேயே கடல்மட்டத்தில் இருந்து மிக உயரத்தில் அமைந்துள்ள குளம் “கவுரிகுண்டம்’. பனிமலைகள் சூழ அமைந்திருக்கும் இக்குளம் 18 ஆயிரத்து 600அடி உயரத்தில் உள்ளது. சிவபெருமானைக் கணவனாக அடைய பார்வதிதேவி இக்குளத்தில் நீராடியே தவம் செய்ததாகக் கூறுவர். இதன் நீர் எப்போதும் பச்சை நிறத்தில் இருக்கும். உமாதேவி தினமும் வந்து நீராடுவதாக ஐதீகம் உண்டு. கவுரிகுண்டத்தின் இடப்பக்கம் தூரத்தில் தெரியும் மலையை ஹயக்ரீவமலை என்கின்றனர்.

Advertisements
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: